புதன், 19 டிசம்பர், 2012

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா?


ஆனால் இஸ்லாமியர் கட்டாயமாக மதம் மாறியுள்ளனரே? இந்துக்களாக இருந்தவர்மீது ‘ஜிஸியா’ என்னும் தண்டனை வரி விதிக்கப்பட்டதாகப் பாடநூல்களில் படித்திருக்கிறோமே? 

மறுபடியும் பாடநூல்களா, சரி. மன்னர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தபோதும் அவர்கள் மக்களின் எதிரிகள்தான். ஏதாவது ஒன்றைச் சொல்லி மக்களைக் கொள்ளையடித்தவர்கள்தான். முஸ்லிம் மன்னர்கள் இந்துக்கள் மீது ‘ஜிஸியா’ வரிசுமத்தியது உண்மைதான். ஆனால் இந்த வரி இந்துக கோயில்களைப் பராமரிக்க என்று சொல்லப்பட்டது. இஸ்லாமிய மக்கள் மீது வரி இல்லை என்று நினைத்துவிடாதீர்கள். ‘சக்காத்’ என்ற பெயரில் அவர்களிடமும் வரி வசூலிக்கப் பட்டது. ‘ஜிஸியா’ வரியும் கூடப் பெண்கள், குழந்தைகள், பார்ப்பனர்களிடம் வசூலிக்கப்பட்டதில்லை. இந்து மன்னர்கள் யூதக் குடிகளிடமிருந்து ‘ஜிஸியா’ வசூலித்தனர் என்று பதினான்காம் நூற்றாண்டுப் பயணி ஒருவர் குறிப்பிடுகிறார். ஜிஸியாவுக்காகப் பயந்து கொண்டு இந்துக்கள் மதம் மாறினார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். எந்த முஸ்லிம் மன்னரது காலத்திலும் இந்து மக்கள் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டதில்லை. இதன் பொருள் மதமாற்றங்ளே இல்லை என்பதல்ல; இரண்டு வகைகளில் மதமாற்றங்கள் நடைபெற்றன. ஒன்று: “எல்லோரும் சகோதரர்களே” என்கிற ‘சுஃபி’ துறவிகளின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு இந்து மதச் சாதிக் கொடுமைகளால் வெறுப்புற்ற அடிநிலை மக்கள் இஸ்லாமிற்கு மாறினர். இரண்டு: அரசியல் ரீதியாக ஆளும் வர்க்கமாக இருந்து புதிய மன்னர்களைத் தங்கள் விசுவாசத்தால் அசத்த விரும்பியர்களும் மதம் மாறியுள்ளனர். ஆனால் எந்த நிலையிலும் சாதாரண மக்கள் கட்டாயமாய் மதம் மாற்றப்பட்டதில்லை. அரசியல் காரணங்களுக்காகச் சில சமயங்களில் சந்தேகத்திற்கிடமான சில சமீன்தார்கள் மதம் மாற்றப்பட்டிருக்கலாம். 

அலாவுதீன் கல்ஜி இந்து ஜமீன்தார்களை ஒடுக்கினானே? 
அவர் இந்துவல்லாத இஸ்லாமிய ‘இக்தாதார்’களையும் கூடத்தான் ஒடுக்கினார். மதவெறியன் என நீங்கள் அவரைத் தூற்றுகிறீர்கள். ஆனால் அவர் காலத்திய இஸ்லாமிய வரலாற்றாசிரியர் ஜியாபரனி என்ன சொல்கிறார் தெரியுமா? இஸ்லாம் மதத்திற்காகக் கல்ஜி ஒரு அரசன் என்ற முறையிலோ, தனி வாழ்விலோ எதுவும் செய்ததில்லை எனத் தூற்றினார். திருப்பித் திருப்பிச் சொல்கிறேன் என நினைக்காதீர்கள். அரசியல் காரணங்களுக்காகச் சில தனிநபர்களை இஸ்லாமாக்க அவுரங்கசீப் போன்ற மன்னர்கள் செய்த சில முயற்சிகளை, பெரும் மக்கள் திரள்களைக் கட்டாயமாக மதம்மாற்றினார்கள் என்ற பொருளில் நாம் புரிந்துகொள்ளக் கூடாது. அரசியல் நோக்கத்திற்காகக் குறுநில மன்னர்களோடு கட்டாயமான மண உறவுகளை இந்து மன்னர்கள் ஏற்படுத்திக் கொண்டது பற்றி வரலாற்றிலும், சங்கப் பாடல்களிலும் படிக்கிறோமில்லையா அப்படித்தான் இதுவும். இதெல்லாம் சரி அல்லது தவறு என நான் சொல்ல வரவில்லை. எத்தனையோ தலைமுறைகளுக்கு முன்புமேற்கொள்ளப்பட்ட அதிகார வெறி பிடித்த மன்னர்களின் நடவடிக்ககளை அவற்றிற்குரிய சூழலிலிருந்து விலக்கிப் பூதாகரப்படுத்தி இன்றைய தலைமுறையைச் சேர்ந்த அப்பாவி மக்கள் மீது இரத்த வெறி கொண்ட பகைமையை ஏற்படுத்தப் பயன்படுத்தக் கூடாது. 

 இந்து மன்னர்கள் எத்தனையோ கொடுமைகள் செய்திருக்கலாம். ஆனால் ஓரிருவரைக் கூடக் கட்டாயமாய் மதம் மாற்றியதில்லையே? 
நாம் சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் இஸ்லாம், கிறிஸ்தவம், பவுத்தம் போன்றவை பரப்புதற்குரிய மதங்கள். இந்து மதம் அப்படிப்பட்டதல்ல. முற்பிறவியில் ஒருவர் செய்த கருமவினைகளுக்கேற்ப இப்பிறவியில் அவர் குறிப்பிட்ட சாதியில் பிறந்து இழிவுகள் அல்லது பெருமைகளை அடைகிறார் என்கிறது இந்துமதம். எனவே ஒருவரை வேற்று மதத்திலிருநது இந்து மதத்திற்கு மாற்றினால் அவரை எந்தச் சாதியில் வைப்பது என்பது இந்து மதத்திற்கு ஒரு பிரச்சனை. அடுத்து இங்கேயுள்ள வைதிக, சனாதன, வருணாசிரமதத்திற்கு இந்து மதம் என்ற பெயர் சமீபத்தில் ஏற்பட்டதுதான் என்பதை சங்கராச்சாரி, விவேகானந்தர், பாரதி உட்படச் சகலரும் ஏற்றுக்கொள்கின்றனர். வரலாறு முழுமையும் பல்வேறு சுதந்திரமான இனக்குழு மக்களை அவர்களுக்கொரு சாதிப் பெயர் கொடுத்துத் தனது ஆட்சிக்குள்ளும் சாதிய ஏற்றுத் தாழ்வுகளுக்குள்ளும் இந்து மன்னர்கள் பார்ப்பனரின் துணையோடு கொண்டு வந்துள்ளனர். இதன்மூலம் அந்தச் சுதந்திர மக்கள் மீது பொருளாதாரச் சுரண்டல்களும் சாதியக் கடமைகளும் திணிக்கப்பட்டு அவர்கள் என்றென்றும் அடிமைகளாக்கப் பட்டனர். மூன்றாவதாக மதம் மாற்றியதில்லையே தவிர, மாற்று மதஙகளை இழிவு செய்வதிலும் அரசதிகாரத்தின் துணையோடு மாற்று மதத்தவரை இரக்கமேயில்லாமல் கொன்று குவித்ததிலும் இந்து மதம் வேறெந்த மதத்திற்கும் சளைத்ததில்லை. இந்து சமயாச்சாரியார்களின் துணையோடு பாண்டிய மன்னன் எண்ணாயிரம் சமணர்களை ஆசன வாயில் கூரிய இரும்பைச் செருகிக் கொன்றதை நமது பக்தி இலக்கியங்கள் பாராட்டியுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.‘பாசிப்பல் மாசிமெய்யர்’, ‘ஊத்தைவாயர்’, ‘மந்திபோல் திரியும் அந்தகர்கள்’ என்றெல்லாம் திருநாவுக்கரசர் சமணர்களைத் திட்டியுள்ளதைத் தேவாரத்தில் காணலாம். சமணர்களையும் சாக்கியர்களையும் “கூடுமேல் தலையை ஆங்கே அறுப்பதே கருமங்கட்டாய் அரங்கமா நகருளானே” என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் வேண்டினார். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போலச் சாக்கியப் பெண்களைக் கற்பழிக்கத் திருவுள்ளம் வேண்டுமெனச் சம்பந்தர் பாடினார். பாடியது மட்டுமல்ல சோழ, பாண்டிய அரசுகளின் துணையோடு இவை எல்லாம் நிறைவேற்றப்பட்டதற்கு வரலாற்றில் சான்றுகளுள்ளன. 
தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.