புதன், 2 மே, 2012

தொழுகை!


Post image for தொழுகைஉலகில் அல்லாஹ் மனிதனைப் படைத்ததின் நோக்கம்  தனக்கு மட்டும் இருந்து  தனக்கே முற்றிலுமாக அடிபணிய வேண்டும் என்பதற்காவே. அந்த அடிமைத்தன்மை மனிதனிடம் வெளிப்படுவதற்காக சில அமல்களை அவன் அவசியமாக்கியுள்ளான். அந்த அமல்களில் முக்கியமானது தொழுகையாகும். அந்த தொழுகையை முறைப்படி. முழுமையாக நிறைவேற்றும்போது   அல்லாஹ்வால் அது
அங்கிகரிக்கப்பட்டு   நன்மைகளை பெற்றுத் தரும் நற்காரியமாக அமைந்து விடுகிறது. அதற்கு மாற்றமாக   முறை தவறி   முறைகேடாக செயல்படுத்தப்படுமானால் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாததாக ஆகி விடுகின்றது. எனவே அல்லாஹ்விடத்தில் வெறும் தொழுகை எனும் ரிதியில் கவனிக்கப்படாது மாறாக   எத்தகைய தன்மைகளில் அது நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதே முக்கியமாக கவனிக்கப்படும். எனவே தான் அல்லாஹ் தொழுபவர்களின் முடிவை இரண்டுவிதமாக சொல்லிக் காட்டுகிறான்.
தங்கள் தொழுகையில் உள்ளச்சத்துடன் இருக்கும் முஃமின்கள் நிச்சயம் வெற்றி பெற்று விட்டார்கள்.(23.1  2)
தங்கள் தொழுகையில் கவனமற்றவர்களாக இருக்கும் தொழுகையாளிகளுக்கு கேடுதான்.(107.4  5) தொழுகையாளிகளில் சிலருக்கு வெற்றி கிடைக்கின்றது. சிலருக்கு நாசம் உண்டாகிறது. இரண்டுமே தொழுகையிலிருக்கும் தன்மையே பொறுத்தே அமைகின்றது. நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைப்படி தொழுகையை நிறைவேற்றும்போது அது முழுமையானதாகவும் வெற்றி கொடுக்கக் கூடியதாகவும் அமைந்து விடுகிறது. தொழுகை பாவங்களை நீக்கி மனிதனை சுத்தப்படுத்தக்கூடியது என்பதால்   அந்த தொழுகையை நிறைவேற்றும்போது   வெளிப்படையாக எல்லாவிதத்திலும் சுத்தத்தை மேற்கொள்ள வேண்டும். எனவே இடம்  உடை  சுத்தமாக இருப்பதுடன் உடலும் சுத்தமாக இருக்க வேண்டும். கடமையான குளிப்பையும் ஒளுவையும் பரிபூரணமாக செய்வது தொழுகை பரிபூரணவதற்குரிய முக்கிய வழியாகும். எனவே தான் நபி (ஸல்) அவர்கள்   இப்படிக் கூறீனார்கள்.
சுவர்க்கத்தின் திறவுகோல் தொழுகையாகும். தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும்.(அஹ்மது)
தொழுகையின் ஒவ்வொரு நிலையையும் நிதானமாக முறைப்படி நிறைவேற்ற வேண்டும். அவசர அவசரமாக   அரைகுறையாக நிறைவேற்றக்கூடாது. ஆபூஹீரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் பள்ளியின் ஓரத்தில் அமர்ந்திருந்தபோது   ஒரு மனிதர் பள்ளிக்கு வந்து தொழுதார். பிறகு நபி(ஸல்) அவர்களிடம் வந்து ஸலாம் சொன்னபோது   நபியவர்கள் பதில் கூறி விட்டு திரும்ப நீர் தொழுவீராக   ஏனெனில் நீர் தொழுகவில்லை என்று கூறினார்கள். இவ்வாறே மூன்றாவது தடவையும் நபியவர்கள் சொன்னபோது   அம்மனிதர்   யாரசூலல்லாஹ் எனக்கு கற்றுக் கொடுங்கள் என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள்  நீர் தொழுகைக்கு தயாரானால் ஒளுவை நல்ல முறையில் செய்யுங்கள். பிறகு கிப்லாவை முன்னோக்கி   தக்பீர் கட்டுங்கள்   பிறகு குர்ஆனிலிருந்து உங்களுக்கு (தடுமாற்றமின்றி ஓதுவதற்கு) இலகுவான   வசனங்களை ஓதுங்கள். பிறகு ருகூவு செய்யுங்கள். அதில் (அவசரப்படாமல்   நிதானமாக) நிம்மதியாக செய்யுங்கள். பிறகு (ருகூவிலிருந்து) எழுந்திருந்து நேராக நில்லுங்கள். பிறகு ஸஜ்தா செய்யுங்கள். அதில் (அவசரப்படாமல்) நிம்மதியாக செய்யுங்கள். பிறகு தலையை உயர்த்தி நேராக உட்காருங்கள்   பிறகு ஸஜ்தா செய்யுங்கள். அதிலும் (அவசரப்படாமல்) நிம்மதியாக செய்யுங்கள்   பிறகு தலையை உயர்த்தி நேராக நில்லுங்கள். இவ்வாறே தொழுகையில் மற்ற ரக்அத்திலும் செய்வீராக.(புகாரி 1 109)
அடிபணிதலை செயல் வடிவில் வெளிப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட தொழுகையில் ருகூவும்  ஸுஜூதும் முக்கியமாகும். ஏனெனில் பொதுவாக ஒருவருக்கு முன்னால் குனிவது   பணிவு   தாழ்வு   அடிமைத்தனம் ஆகியவற்றின் அடையாளமாகும். தலையை தரையில் வைத்து ஸஜ்தா செய்வது அந்த அடிமைத்தனத்தின் உச்சகட்டமாகும். அதனால் தான் ஒவ்வொரு ரக்அத்திலும் ஸஜ்தாவை இரண்டு தடவை செய்யுமாறு கட்டளையிடப்பட்டுள்ளது. ருகூவு   ஸஜ்தாவில் குறைபாடு செய்வது   அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய அடிபணிதலில் குறைபாடு செய்வதைப் போன்றது என்பதால்   நபி(ஸல்) அவர்கள் அவ்விரண்டு நிலைகளையும் முறைப்படி  முழுமையாக செய்வதை வலியுறுத்தியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். ருகூவிலும் ஸஜ்தாவிலும் தன் முதுகை (வளைக்காமல்) நேராக வைக்கும் வரை எந்த மனிதனின் தொழுகையும் (பரிபூரணமாக) நிறைவேறாது. (அபூதாவூது-திர்மிதி) ருகூவு   ஸஜ்தாவை அவசர அவசரமாக செய்யாமல்   குறைந்தபட்சமாக   மூன்று தஸ்பீஹ்கள் ஓதும் வரை நிதானமாக செய்ய வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். உங்களில் ஒருவர் ருகூவு செய்து   மூன்று தடவை சுப்ஹான ரப்பியல் அளீம் என்று சொன்னால்   அவரது ருகூவு பூரணமடைந்து விடும். மேலும் இது குறைந்த பட்சமாகும். ஸஜ்தா செய்து   அதில் மூன்று தடைவ சுப்ஹான ரப்பியல் அஃலா என சொன்னால்  அவரது ஸஜ்தா பூரணமாகி விடும் மேலும் இது குறைந்த பட்சமாகும். (திர்மிதி-அபூதாவுது) ருகூவு    ஸஜ்தாவை முழுமையாக செய்யாமல் அவசரமாக செய்பவர்களை நபி (ஸல்) கடுமையாக சாடுவதற்கும் தயங்கவில்லை.
மனிதர்களில் மிகக் கெட்ட திருடன் தன் தொழுகையை திருடுபவன் என நபி (ஸல்) அவர்கள் சொன்னபோது   ஸஹாபாக்கள்   யாரசூல்லாஹ்  தொழுகையை எப்படி திருடுவான்? என வினவினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள்  தனது ருகூவையும் ஸஜ்தாவையும் அவன் பூர்த்தி செய்யமாட்டான் என பதிலுரைத்தார்கள். (தாரமீ)
ஒரு முறை ஹீதைபா (ரலி) அவர்கள்  பள்ளியில் அமர்ந்திருக்கும்போது   ருகூவையும்   ஸஜ்தாவையும் முழுமையாக செய்யாமல் தொழுது கொண்டிருந்த ஒரு மனிதரை பார்த்தார்கள். அவர் தொழுது முடிந்தவுடன் அவரை அழைத்துச் சொன்னார்கள்.
நீர் (முழுமையாக) தொழுகவில்லை   இந்நிலையில் நீர் மரணித்தால்   நபி(ஸல்) அவர்களின் வழிமுறையல்லாததின் மீது மரணித்தவனாக ஆகி விடுவாய். புகாரி (156) ஜமாஅத்தாக இமாமுடன் சேர்ந்து தொழுகும்போது இமாம் எந்நிலையில் இருக்கிறாரோ அந்நிலையில் தொழுகையில் சேர வேண்டும். இமாம் ஸஜ்தாவிலோ   அத்தஹியாத்தலோ இருந்தால் அடுத்த ரக்அத்திற்கு வரும் வரை எதிர்பார்க்க தேவையில்லை.இமாம் (தொழுகையிலுள்ள) ஏதேனும் ஒரு நிலையில் இருக்கும்போது உங்களில் ஒருவர் தொழுகைக்கு வந்தால்  (இமாமுடன் சேர்ந்து) இமாம் செய்வதைப் போன்று செய்யவும். (திர்மிதி)
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். நாங்கள் ஸஜ்தாவில் இருக்கும் நிலையில் தொழுகைக்கு வந்தால்   நீங்களும் ஸஜ்தா செய்யுங்கள். (ஆனால்) அதை (ரக்அத்தாக) கணக்கில் எடுக்காதீர்கள். யார் ருகூவை அடைந்து கொள்கிறாரோ  அவர் தொழுகையை (ரக்அத்தை) அடைந்தவராவார்.(அபூதாவூது) இமாமுடன் சேர்ந்து தொழும் போது வரிசையின் ஒழுக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும். வரிசையில் முன்பின் இல்லாமல் நேராக நிற்கவேண்டும். இடைவெளியில்லாமல் சேர்ந்து நிற்க வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். வரிசைகளை நேராக்குங்கள். தோள் புஜங்களை (கவனித்து) நேர்படுத்திக் கொள்ளுங்கள். இடைவெளிகளை அடைத்து நில்லுங்கள். சைத்தானிற்கு (தோதுவாக) இடைவெளிகளை விட்டு வைக்காதீர்கள். யார் வரிசைகளை (துண்டித்து விடாமல்) சேர்ந்து நிற்பாரோ அல்லாஹ்வும் அவரை சேர்த்துக் கொள்வான். யார் வரிசைகளை துண்டித்து (அடுத்த வரிசையில்) நிற்பாரோ அல்லாஹ் அவரை துண்டிப்பான். (அபூதாவுது 1 97)
இமாமுக்குப் பின் நின்று தொழுவதே இமாமை பின் தொடர்ந்து தொழுவதற்குத் தான். எனவே ருகூவு   ஸஜ்தாவிற்கு செல்லும் போதும்   ஸஜ்தாவிலிருந்து எழுந்திருக்கும் போதும் இமாமுக்கு முந்தி செய்யக் கூடாது.இவ்வாறு செய்வதை நபி(ஸல்) அவர்கள் கடுமையாக கண்டித்துள்ளார்கள். அபூஹீரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இமாமை முந்தி செய்யாதீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புகாரி) மற்றொரு ஹதீஸில் இப்படி வந்துள்ளது.
இமாம் ஸஜ்தாவில் இருக்கும்போது   (இமாமை முந்தி) தன் தலையை உயர்த்தினால் அல்லாஹ் அவரது தலையை கழுதையின் தலையைப் போன்று மாற்றுவதை உங்களில் யாரும் பயப்பட வேண்டாமா? என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். (அபூதாவூது 1 91) நம்முடைய தொழுகை முழுமையடைவதற்காக சில விசயங்களை நாம் கடைபிடிப்பதைப் போன்று பிறர் தொழுகை முழுமையடைவதற்காக சிலவற்றை கடைபிடிக்க வேண்டும். அதில் முக்கியாமனது   பிறர் தொழும் போது மறைப்பிற்கும் அவருக்குமிடையில் குறுக்கே செல்லாமலிருப்பதாகும். அவ்வாறு செல்வதின் மூலம் தொழுபவரின் கவனம் சிதறி   முழுமையடையாமல் போய்விடும். எனவே அவ்வாறு செல்வதை நபி(ஸல்) அவர்கள் வன்மையாக கண்டித்துள்ளார்கள்.
ஒரு முறை ஜும்ஆ நாளென்று   அபூஸயிதில் குத்ரி(ரலி) அவர்கள்   ஒரு மறைப்பிற்கு பின் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது   பனூ அபீ முயீத் எனும் கூட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபர்  அவருக்கு முன்னால் குறுக்கே செல்வதற்கு நாடினார். தொழுது கொண்டிருந்த அபூஸயீது (ரலி) அவர்கள் நெஞ்சில் அடித்து தடுத்தார்கள். அவ்வாலிபர் சுற்றிப் பார்த்தார். இவ்வாறு குறுக்கே கடந்து செல்வதைத் தவிர வேறு வழியை பெற்றுக் கொள்ளவில்லை. எனவே மீண்டும் அவ்வாறு செல்ல முற்பட்டபோது   அபூஸயீது (ரலி) அவர்கள் முன்பை விட பலமாக அடித்துத் தடுத்தார்கள். இதனால் அவ்வாலிபருக்கு வலி ஏற்பட்டது. தொழுது முடித்த பின்பு   அவ்வாலிபர் அப்போதைய கலீபாவான மர்வான் அவர்களிடம் சென்றார். அபூஸயீது (ரலி) அவர்களும்   அவரை பின் தொடர்ந்து மர்வான் இடம் வந்தார்கள். அபூஸயீது அவர்களே உங்களுக்கும் உங்கள் சகோதரர் மகனுக்குமிடையில் என்ன பிரச்சனை என்று மர்வான் அவர்கள் வினவியபோது   அபூஸயீது (ரலி) அவர்கள் கூறீனார்கள். நபி(ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன். உங்களில் ஒருவர் மறைப்பு வைத்து தொழுது கொண்டிருக்கும்போது   அவருக்கு முன் யாரேனும் குறுக்கே செல்ல நாடினால்   அவரை தடுத்து நிறுத்தட்டும். அவர் மறுத்து மீண்டும் செல்ல முற்பட்டால் அவரை பலமாக அடித்து தடுக்கட்டும். ஏனெனில் அவர் ஷைத்தான் ஆகும்.(புகார் 1 73)
இவ்வாறு நாம் தொழுகையின் முறைகளை கடைபிடித்து முழுமையாக நிறைவேற்றினால் அதன் கூலியை முழுமையாக பெற்றுக் கொள்ளலாம். அரை குறையாக தொழுதால் அதற்கேற்பத் தான் கூலியும் கிடைக்கும். இதைத்தான் நபி(ஸல்) அவர்கள் இப்படிக் சொன்னார்கள். ஒரு மனிதர் தொழுதுவிட்டு திரும்பும் போது அவருக்கு (தொழுகையின் தன்மையைப் பொறுத்து) நன்மை கிடைக்கும் (அபூதாவுது 1 115).
எல்லாம்வல்ல அல்லாஹ் நமது தொழுகைகளை பரிபூரணத்துவம் மிக்கதாக ஆக்குவானாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.